1995 களில் “ஜூனியர் விகடனில்” வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
கவிஞர்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசினாலும் அவர்களுடைய இதயம் ஒரே மொழியில் பேசுகிறது. அது கண்ணீராலும், புன்னகையாலும் ஆன மொழி; எல்லோருக்கும் பொது மொழி; திணிக்கப்படும் மொழி அல்ல; சுவாசத்தைப் போல காதலைப் போல சுயமாகச் சுரக்கும் மொழி.
இந்தக் கண்ணீர் நம் பொதுக் காயங்களின் இரத்தம். இந்தப் புன்னகை நம் பொது வெற்றிகளின் திருவிழாத் தீபம்.
ஒருமை இதயங்களின் இயல்பான குணம். வேற்றுமை நம்முடைய வேஷங்கள். இந்த வேஷ ஒப்பனைகளை நீக்கி இதயங்களின் ஒருமையை உணர்த்தும் சக்தி கவிஞனுக்குத்தான் உண்டு.
நம்முடைய உண்மையான தேசிய நீரோட்டத்தை இலக்கியங்களில்தான் காண முடியும். இந்த நீரோட்டத்தின் நதிமூலம் ஒன்றல்ல, பல; அது பாய்ந்தோடிய வரலாற்றுப் பாதையில் வந்து கலந்த உப நதிகளும் பல. இந்தப் “பலவேணி சங்கம”த்தின் விளைவாக இந்த நீரோட்டத்திற்கு நுண்மையானதொரு பொது சுவையும், பொது நிறமும் ஏற்பட்டிருக்கிறது. இந்த நீரோட்டத்தின் சாரத்தை அருந்தியே இந்திய இலக்கியங்கள் பயிராகின்றன.
நம் நாட்டுப் பிறமொழி இலக்கியங்களை அறிமுகம் செய்து கொள்வதன் மூலம் அவற்றோடு ஒப்பிட்டு நம்மை மதிப்பிட்டுக் கொள்ளவும், வேண்டினால், திருத்திக் கொள்ளவும், புதிய வளங்களைப் பெற்றுக் கொள்ளவும் முடியும். இந்த நோக்கமே இந்த கட்டுரைகளின் பிறப்புக்கு மூலகாரணம். இவ்வாறு கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் தனது அணிந்துரையில் கூறியிருக்கிறார்.
Reviews
There are no reviews yet.