இன்று நமக்குக் கிடைத்துள்ள இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் படைப்புகளில் காலத்தால் முந்தியது இந்த ‘ஆயிர மசலா’ என்னும் அரிய காவியமே என்னும் உண்மை இப்போது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
சென்ற சில ஆண்டுகளுக்கு முன்புவரை, பண்டைய இஸ்லாமியத் தமிழ் இலக்கியச் செல்வங்கள் மறைக்கப்பட்டும் மறைந்து கொண்டும் வந்தன. அவை அடியோடு மறைந்து அழிந்து போக விடக்கூடாது என்னும் எண்ணத்துடன் அவற்றைப் புதுப்பித்து, வெளியிட்டு அவற்றின் சிறப்புகளை மக்கள் அறியச் செய்ய வேண்டும் என்னும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். மனவளம் படைத்த வள்ளல்கள் சிலரின் உதவியாலும், தனிப்பட்டவர்களின் முயற்சியாலும், முக்கியமான பல இலக்கியங்கள் புத்துயிர் பெற்றுள்ளன.
இஸ்லாமிய இலக்கியம் என்றால் சீறாப்புராணம், மஸ்தான் சாஹிபு பாடல்கள்தான் என்ற நிலை சில ஆண்டுகளுக்கு முன்வரை இருந்தன. தற்பொழுது அந்த நிலை சிறிது மாறி, சில இலக்கியங்கள் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் மூலமாகவும், எங்களது ‘யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்’ மூலமாகவும் வெளிவந்துள்ளன. எனினும் மீண்டும் வெளிவர வேண்டிய இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் ஏராளம் உள்ளன. அவற்றை எல்லாம் தேடிப்பிடித்துப் பதிப்பிக்க வேண்டும் என்று மறைந்த பன்னூல் ஆசிரியர் எனது மாமா எம்.ஆர்.எம். அப்துற்-றஹீம் அவர்கள் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே என்னிடம் கூறினார்கள்.
மறைந்த கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களும் மறு பதிப்பு செய்ய வேண்டிய ஏராளமான இஸ்லாமிய இலக்கியங்கள் பதிப்பிக்கப்பட வேண்டும். உலகத் தமிழ் மக்களிடம் சென்றடைய வேண்டும் என்றும் என்னிடம் அடிக்கடி கூறுவார்கள். நானும் எங்களது யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் மூலமாகப் பழைய, மறபதிப்பு செய்ய வேண்டிய இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களை வெளிக்கொண்டு வருகிறேன் என்று அவர்களிடம் கூறினேன்.
அவ்வாறு தேடிய நூல்களுள் ‘ஆயிர மசலா’ என்ற நூலும் ஒன்று. இஸ்லாமிய இலக்கியங்களுள் முதல் காப்பியமான அந்த நூலை வெளியிட வேண்டும் என்று மறைந்த அண்ணன் கவிக்கோ அவர்கள் என்னிடம் அடிக்கடி கூறினார்கள். அச்சமயம் இத்ரீஸ் மரைக்காயர் அவர்கள் வெளியிட்ட ‘ஆயிர மசலா’ ஒரு பிரதி கிடைத்தது. கவிக்கோ அண்ணன் அவர்கள் மிகவும் மகிழ்வுடன் இந்த நூலை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டார்கள். நானும் கம்மதித்தேன். அவர்கள் இருக்கும் பொழுதே இந்த நூல் வெளிவந்திருந்தால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள். இறைவன் நாடவில்லை. இறைவன் எப்பொழுது நாடியிருக்கின்றானோ அப்பொழுதுதான் வெளிவரும். வல்ல இறைவன் இப்பொழுது நாடிவிட்டபடியால் ‘ஆயிர மசலா’ நூல் தங்கள் கைகளில் தவழ்கிறது.
-எஸ்.எஸ். ஷாஜஹான்
யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
Reviews
There are no reviews yet.