ஈரோடு ஜமால் முஹம்மது என்ற இருமுக நாணயத்தின் ஒரு முகம் வள்ளல் ஜமால் முகமது, மறுமுகம் ஜவ்வாதுப் புலவர். இந்த ஈரோடைகளும் வளப்படுத்திய ஈர எழுத்து நிலம். இஸ்லாமிய இலக்கியங்கள் லைலா என்றால் ஜமால்தான் மஜ்னூன். இந்தப் பம்பரம் சுற்றுவதும், சுழல்வதும் சித்தர்கள், சூபியாக்கள் ஆகிய ஞானம்பாடிகளின் பாடல் வரிகள் என்னும் சாட்டையினால்தான். இந்த ஆன்மீகத் தேனீ தனக்கு வேலிகளோ, வரப்புகளோ, எல்லைக்கோடுகளோ தடையில்லை. திக்ரு, தியானம், மூச்சுப் பயிற்சி, யோகம் ஆகிய பாட்டைகளில் பயணம் என்றாலும் இவரின் இலக்கு ஏகத்துவம்தான்.
இணக்கமும் ஒரு வணக்கமே என்று பக்குவப்பட்டிருப்பதால் இறையருளிய அனைத்துச் சமூகங்களிடமும் நல்லுறவு பேணி வருபவர். புதிய இலக்கிய மகசூலுக்கு ஏரும் நீருமாக இருப்பவர், சுரப்பவர். வரலாற்றின் வாக்கிய வீதிகளில் வசிப்பவர். இந்திய விடுதரை வீரர்களில் முந்திய விடுதலைப் போராளி, மரணத்தை வீரத்தால் தோற்படித்த மைசூர் வேங்கை தீரர் திப்பு சுல்தானிடம் வற்றாத வாஞ்சை கொண்டவர். அவர் சரித்திரத்தை எண்ணுகையில் பெருமிதமும், எழுதுகையில் புளகமும் ஓங்கிட ஆவணப்படுத்தி வரும் ஆர்வலர். இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகத்தின் உள்ளுர், உலக மாநாட்டுக் கருத்தரங்கங்களில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கும் ஆற்றல் வாய்ந்தவர், இத்தகைய பக்குவமுற்ற ஜமாலின் வெளிச்சம் என்ற இந்நூல் புதிய தரிசனங்களை நோக்கி வெகு ஜனங்களை ஈர்க்கிறது.
Reviews
There are no reviews yet.