இந்திய விடுதலைப் போரில் இன்னுயிரைத் துச்சமென ஈந்தோர், இல்லம் இழந்தோர், இல்லாளைப் பிரிந்தோர், தடியடிபட்டோர், தண்டனைகள் பெற்றோர், சிறைச்சாலைகளில் சித்திரவதைக்குள்ளானோர் என நீண்டு கொண்டே செல்கிறது இஸ்லாமிய தியாக சீலர்களின் வரலாறு.
அதில் அத்தியாயங்களாக, வாக்கியங்களாக, ஏன் வார்த்தையாகக்கூட இடம் பெறாமல் வஞ்சிக்கப்பட்டுத் தங்கள் வரலாற்றையே தியாகம் செய்திருக்கிறார்கள் முஸ்லிம்கள். இந்திய விடுதலைப் போரில் பாளையக்காரர்கள் காலத்தில் அவர்கள் ஆற்றிய தியாகத்தை இயன்றவரை இந்நூலில் தொகுத்திருக்கிறார் செ. திவான்.
சுதந்திரமும் சுய மரியாதையும் இரு கண்கள் எனக் கருதி வாழும் இந்திய முஸ்லிம்கள் தங்கள் வீட்டை மறந்து நாட்டை நினைத்துத் தங்களை மெழுகுவர்த்திகளாக்கிக் கொண்டு இந்திய நாட்டிற்குச் சுதந்திரம் ஈட்டித் தந்தனர். நம் கண்ணறையின் ஒளிபடாமல் கல்லறையில் துயிலும் அந்த விடுதலை வீரர்கள் கண்ணியத்திற்குரியவர்கள்.
அவர்கள் நம் கருத்தில் நிறைந்திருந்து, காலகாலங்களுக்கும் முஸ்லிம்கள் இந்த மண்ணில் யாருக்கும் தாழாமல் தன்மானத்தோடு சரிநிகர் சமமாக வாழவும் ஜனநாயகத்தால் ஆளவும் நாளும் உத்வேகம் தந்து கொண்டே இருப்பார்கள். அத்தகைய வீரத்தியாகிகளின் வரலாற்றினை இந்நூல் விரிவாகத் தருகிறது.
Reviews
There are no reviews yet.