சென்னையில் என் தலைமையில் ஒரு கவியரங்கம் நடந்தது. அதில் பாலுமகேந்திரா¸ கே.எஸ். ரவிக்குமார்¸ பார்த்திபன் போன்ற பிரபலமான
இயக்குநர்கள் கலந்து கொண்டு கவிதை பாடினர்.
அப்போது இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் அவர்கள்¸ “திரைப் படங்களுக்குப் பாடல் எழுதாமலே திரைப்படப் பாடலாசிரியர்களுக்கு இணையாகப் புகழ்பெற்றவர் கவிக்கோ அப்துல் ரகுமான்” என்று புகழ்ந்துரைத்தார்.
அவர் அத்தகைய சான்றிதழ் தர எனக்கு உதவியவை கவியரங்கங்களே.
கவியரங்கங்களே என்னை மக்களிடம் அழைத்துச் சென்றன.
தழிழ்நாட்டிலுள்ள ஏறத்தாழ எல்லா அமைப்புகள் நடத்திய கவியரங்கங்களிலும் நான் கலந்து கொண்டிருக்கிறேன். இதற்காகப் பட்டி தொட்டியெல்லாம் பயணம் செய்திருக்கிறேன்.
வானொலி¸ தொலைகாட்சி என்று எல்லா ஊடகங்களையும் நான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
இது என் கவியரங்கக் கவிதைகளின் இரண்டாம் தொகுதி.
என் கவியரங்கக் கவிதைகளை ஒன்றாகத் தொகுத்துப் பார்த்தபோது ஒரு விஷயம் புலப்பட்டது.
மேனாட்டில் புதிய கவிதை இயக்கங்கள் வந்த பிறகு சிலருக்குப் பழைய செவ்வியல் (Classicism) மீது ஆர்வம் ஏற்பட்டுப் புதுச் செவ்வியல் (Neoclassicism) இயக்கம் ஒன்று தோன்றியது. அது உயர்ந்த பழைய செவ்வியல் மரபுகளை மீண்டும் கவிதையில் கொண்டு வந்தது.
என் கவியரங்கக் கவிதைகளில் நான் இதையே செய்திருக்கிறேன். இது எனக்கு ஒரு வகையில் மகிழ்ச்சியைத் தருகிறது.
சிற்றிலக்கிய மரபுகளைக் குறிப்பாகத் தூது¸ உலா இலக்கியங்களின் சாயரை நீங்கள் இந்தக் கவிதைகளில் காணலாம்.
கவிதைகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று தானே உதிக்கும் கவிதை¸ மற்றொன்று மக்களுக்கு ஏதேனும் செய்தி கூறச் செய்யப்படும் கவிதை.
கவியரங்கக் கவிதைகள் இரண்டாம் வகையைச் சார்ந்தவை. ஆனால் இந்தக் கவிதைகளிலும் தானே உதிக்கும் கவிதை மின்னல்களையும் நீங்கள் காணலாம்.
– கவிக்கோ அப்துல் ரகுமான்
Reviews
There are no reviews yet.