“பெண்களுக்குப் பல கடமைகள் இருக்கின்றன. ஆனால் அவர்களுக்கு இருக்கும் கடமைகளில் பிரதானமானவை மனைவி என்ற முறையில் உள்ள கடமைகளும், அன்னை என்ற முறையில் உள்ள கடமைகளும் ஆகும்.
மனைவி என்ற முறையில் அவர்கள் கணவருக்கு மனைவியாக மட்டும் இருக்கக்கூடாது. கணவருக்குத் துணைவியாகவும் இருக்க வேண்டும்.
அன்னை என்ற முறையில் அவர்கள் பிள்ளைகளைப் பெறுபவர்களாக மட்டும் இருக்கக் கூடாது. பிள்ளைகளை ஒழுங்காக வளர்ப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.
மனைவி என்ற முறையில் அவர்கள் தம் கடமைகளை ஒழுங்காகச் செய்யா விட்டால், அன்னை என்ற முறையில் அவர்கள் தம் கடமைகளை ஒழுங்காகச் செய்யா விட்டால், அவர்கள் இழப்பது கணவரின் திருப்தியை மட்டுமல்ல, அல்லாஹ்வின் திருப்தியையும் ஆகும். கணவரின் திருப்தியை இழந்து விட்டால், இவ்வுலக வாழ்க்கை கெட்டுவிடும். அல்லாஹ்வின் திருப்தியை இழந்து விட்டால் அவ்வுலக வாழ்க்கை கெட்டு விடும்.
எனவே இந்த இரு கடமைகளையும் ஒழுங்காகச் செய்ய வேண்டுமானால், என்னவென்ன புரிய வேண்டும், என்னவென்ன தவிர வேண்டும் என்று இந்நூலில் கூறியுள்ளேன். அவை பெரும் பகுதி அல்லாஹ்வும், அவன் தூதரும் கூறியவற்றை ஆதாரமாகக் கொண்டவை.
இந்த இரு கடமைகளுக்கும் அப்பால், பெண்களுக்கு மருமகள், மாமியார் என்னும் இரு கடமைகளும் இருக்கின்றன. சில மருமகள்களும் இந்தக் கடமையில் தவறுகின்றனர். சில மாமியார்களும் இந்தக் கடமையில் தவறுகின்றனர். இதனால் மருமகள், மாமியார் உறவு இங்கு மட்டுமல்ல, எங்கும் நன்றாக இல்லை. ஒரு நல்ல மருமகள் எப்படி இருக்க வேண்டும் என்றும், ஒரு நல்ல மாமியார் எப்படி இருக்க வேண்டும் என்றும், இந்நூலில் சொல்லியுள்ளேன்.
இந்தக் கடமைகளுக்கும் அப்பால் இன்னொரு கடமையும் பெண்களுக்கு இருக்கிறது. அதுதான் ஒரு நல்ல பெண்மணியாகவும் இருப்பதாகும். ஒரு நல்ல பெண்மணியிடம் என்னவென்ன குணங்கள் இருக்க வேண்டும், என்னவென்ன இயல்புகள் இருக்கக்கூடாது என்றும் இந்நூலில் விளக்கியுள்ளேன்.
பெண்களை நல்ல மனைவியாகவும், நல்ல அன்னையாகவும், நல்ல மருமகளாகவும், நல்ல மாமியாராகவும், நல்ல பெண்மணியாகவும் ஆக்க, இந்நூல் சிறிதளவாவது உதவும் என்பது என் நம்பிக்கை” என்று இந்நூலின் ஆசிரியர் எம்.ஆர்.எம் முகம்மது முஸ்தபா அவர்கள் தனது முன்னுரையில் கூறியிருக்கிறார்கள்.
Reviews
There are no reviews yet.