ஒருவர் பெற்றிருக்க வேண்டிய சிறந்த உடைமை, ஒருவர் தமக்குப் பின் விட்டுச் செல்லக்கூடிய சிறந்த வாரிசு நல்ல பிள்ளைகளே. எனவே, பிள்ளைகளை நல்லவர்களாய் வளர்க்க வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும். அந்தக் கடமையைச் செய்யும் பெற்றோர்கள் தமக்கு மட்டும் நன்மை செய்துகொள்ளவில்லை; தம் பிள்ளைகளுக்கும் நன்மை செய்கிறார்கள். அந்தக் கடமையில் தவறும் பெற்றோர்கள் தமக்கு மட்டும் பாதகம் செய்துகொள்ளவில்லை; தம் பிள்ளைகளுக்கும் பாதகம் செய்துவிடுகிறார்கள்.
எனவே பெற்றோர்கள், இளவயதிலேயே நல்ல பழக்க வழக்கங்களைப் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். நல்ல குண ஒழுக்கங்களைப் பிள்ளைகளிடம் உண்டு பண்ணவேண்டும். அந்தப் பழக்க வழக்கங்கள் யாவை, குண ஒழுக்கங்கள் எவை என்று இந்நூல் கூறுகிறது. அவை பெரும்பாலும் அல்லாஹ்வின் வேதத்தையம், அவன் தூதரின் போதத்தையும் ஆதாரமாகக் கொண்டவை.
“பிள்ளை மதிக்க மாட்டேன் என்கிறான், நன்றாகப் படிக்கமாட்டேனென்கிறான்; நல்ல பிள்ளையாய் இருக்க மாட்டேன் என்கிறான்” என்று சில பெற்றோர்கள் குறைபட்டுக் கொள்வார்கள். அவர்கள் இப்படி குறைப்பட்டுக் கொள்வதில் பலனில்லை. பிள்ளை நல்லவனாய் வளர நாம் என்ன செய்தோம்? என்று அவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். அவர்கள் செய்ய வேண்டிய வேலையைத்தான் இந்நூல் செய்கிறது. பிள்ளைகள் பெற்றோரை மதிக்க வேண்டும், நன்றாகப் படிக்க வேண்டும், நல்ல பிள்ளைகளாக இருக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் நல்ல மகன், நல்ல மாணவன், நல்ல பிள்ளை என்னும் தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
எனவே பெற்றோர்கள் இந்நூலைத் தம் பிள்ளைகளுக்குக் கொடுக்க வேண்டும்; கொடுப்பதுடன் நில்லாது, இதனைப் படிக்கவும், அடிக்கடி படிக்கவும் தூண்டவேண்டும். பிள்ளைகள் இந்நூலைப் படித்தால், அவர்கள் நல்லவர்களாக வளர்வது உறுதி. ஏனெனில், பிள்ளைகளின் மனம் வளமான நிலத்தைப் போன்றது. அதில் நல்ல வித்துக்களைப் போட்டால் நிச்சயமாக நல்ல செடிகள் வளரும்.
இந்த நம்பிக்கையே நான் இந்நூல் எழுதக் காரணமாகும்” என்று இந்நூலின் ஆசிரியர் எம்.ஆர்.எம். முகமது முஸ்தபா அவர்கள் தனது முன்னுரையில் கூறியிருக்கிறார்கள்.
Reviews
There are no reviews yet.