“சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன் இக்பாலைப் பற்றி நான் எழுதி வெளியிட்ட ‘அல்லாமா இக்பால்’¸ ‘இக்பால் கவி அமுதம்’ ஆகிய இரு நூல்களும் அறிஞர்களின் பாராட்டுதலையும்¸ இலக்கிய ரசிகர்களின் நல்லாதரவையும் ஒருங்கே பெற்றன. இப்போது சில வருஷங்களாகவே அவ்விரு நூல்களையும் மறு பதிப்புச் செய்யுமாறு அன்பர்கள் பலர் கேட்டு வந்தனர். அதற்காக அவ்விரு நூல்களையும் பரிசீலனை செய்தபோது¸ அவற்றைவிடப் பன்மடங்கு சிறந்த¸ விரிவான ஒரு புதிய நூலையே எழுதிவிடலாம் என்ற துணிவு பிறந்தது; ‘மகாகவி இக்பால்’ தயாராயிற்று. முந்திய எனது இரு நூல்களிலும் இல்லாத மிகப் பல விஷயங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. இக்பாலின் கவிதைகளையும்¸ தத்துவத்தையும் என் சக்திக்கும் வசதிக்கும் இயன்ற அளவு அறிமுகப்படுத்தியுள்ளேன்.
இதிலுள்ள கவிதை மொழிபெயர்ப்புகள் தடித்த எழுத்துகளில் வரிசையாக அடுக்கப்பட்டுத் தரப்பட்டிருப்பினும்¸ அவை எவ்விதச் செய்யுள் ரூபத்திலோ¸ வசன கவிதையாகவோ தரப்பட்டில்லை. அவை கவிதைகளின் மொழிபெயர்ப்புகள் என்று காட்டவே இவ்விதம் தரப்பட்டுள்ளன.
‘மகாகவி இக்பால்’ இன்னுங்கூடச் சிறப்பாக எழுதப்பட்டிருக்கலாம்; இதிலேயே குறைகளும் இருக்கலாம். ஆனால்¸ தமிழில் நல்ல ஒரு புதிய இலக்கியத்தை அறிமுகப்படுத்த வேண்டும்¸ நமது யுகத்தில் – நமது நாட்டில் வாழ்ந்த ஒரு மகாகவியின் செய்தியைத் தமிழில் வெளியிட்டுத் தரவேண்டும் என்ற உளப்பூர்வமான ஆர்வத்தால் இதை வெளியிடுகிறேன். அவ்விதமே இதை ஏற்றுக்கொள்ளும்படி அன்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று இந்நூலின் ஆசிரியர் ஆர்.பி.எம். கனி அவர்கள் தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
Reviews
There are no reviews yet.