Skip to content

பெண் வலிமார்கள்

40.00

Out of stock

நபிமார்களிலே பெண்கள் இல்லாதது போன்று வலிமார்களிலும் ஆண்கள் மட்டும் தான் உள்ளனரா? பெண்கள் இல்லையா? என்ற கேள்வி என் உள்ளத்தைப் பலகாலம் அரித்துக் கொண்டிருந்தது. என் தந்தையார் எழுதிய “வலிமார்கள் வரலாறு” என்ற நூலைப் படித்த பொழுது அதிலே ராபியத்துல் அதவிய்யா என்ற ஒரு பெண் வலியின் வரலாற்றைப் படித்த காலை என் உள்ளம் மகிழ்வுற்றது. அந்த வரலாற்றின் அடிக்குறிப்பில் அதே பெயருடன் மற்றொரு வலியும் வாழ்ந்து வந்தார் என்பதை நான் கண்ட பொழுது என் மகிழ்ச்சி இரட்டிப்பாகியது. பின்னர் அவர்களைத் தவிர முஆதுல் அதவிய்யா, ஷஅவானா, நஃபீஸா, மிஸ்ரிய்யா, ஷுஹ்தா முதலான எத்தனையோ பெண் வழிமுறைகளையும் இஸ்லாமிய தாய்குலம் ஈன்றுள்ளது என்பதை நான் அறிய வந்த பொழுது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.

என் தாய் திருநாடாம் இந்தியாவிலும் தமிழ் பேசும் நல்லுலகிலும் அத்தகு மாணிக்கங்கள் எத்தனையோ பேர் மிளிர்ந்துள்ளார்கள். அவர்களில் சுவர்க்கத்துப் பெண் ஆயிஷா உம்மாவும் கதீஜா உம்மாவும் இறைநேசச் செல்விகளின் அணியில் உயரிய இடத்தைப் பிடித்து ஒளிர்வதைக் கண்டேன்.

காயல் மாநகரம் ஈன்ற மற்றொரு மாதரசி ஆமினா உம்மா அவர்கள் வலி ஈன்ற வலியாக விளங்கியுள்ளார்கள். அவர்களின் தந்தை மலாக்காவில் அடங்கப் பெற்றுள்ள ஷைகு அப்துல் காதிர் வலியுல்லாஹ் ஆவர். அவர்களின் மகன் கீழக்கரையில் அடங்கப் பெற்றுள்ள அல்லாமா மாப்பிள்ளை லெப்பை ஆலிம் ஆவர்.

ஓரிரவு ஆமினா உம்மா அவர்கள் கனவொன்று கண்டனர். அதில் தாம் சுவனத்திலிருந்து அனுப்பப்பெற்ற கனி ஒன்றைச் சுவைத்து உண்டதாகக் கண்டனர். விழித்தெழுந்த பொழுது தம் இதழ்களின் ஓரத்தில் அந்த கனியின் எஞ்சிய பகுதிகள் சில ஒட்டிக் கொண்டிருப்பதைக் கண்டதும் அதனையும் அவர்கள் சுவைத்து உண்டார்கள். சுவனக் கனியை உண்டதன் பொருள் தமக்கு இவ்வுலக உணவு அற்றுப் போய் விட்டது என்பது தான் என உணர்ந்த அவர்கள் அதன் பின் உணவு உண்ணவே இல்லை. இக்கனவு கண்ட மூன்றாவது நாள் அவர்களின் ஆன்மா இவ்வுலக வாழ்வை உதறித்தள்ளி  சுவனப்பயணத்தை மேற்கொண்டு விட்டது.

இவர்களைத் தவிர திருவனந்தபுரத்தில் பீமாவும், ஆற்றங்கரையில் ஆற்றங்கரை நாச்சியாரும், பரங்கிப்பேட்டையில் அல்குரைஷ் நாச்சியாரும், கும்பகோணத்தில் அரைகாசம்மா தாயாரும், புதுக்கோட்டையில் ஜச்சா பீவியும் அடங்கப் பெற்று அற்புதர் போற்றும் அற்புதராய் விளங்குகிறார்கள்.

இவர்களைத் தவிர பெயர், ஊர் தெரியாத எத்தனையோ பெண் வலிமார்கள் வரலாற்றில் இடம் பெற்றுள்ளார்கள். அவர்களை எல்லாம் தேடி கண்டுபிடித்து அவர்களின் வரலாற்றில் நடந்த இனிய நிகழ்ச்சிகளையெல்லாம் ஒருங்கு சேரத் தொகுத்து இந்நூலை உருவாக்கி இதனை இஸ்லாமியத் தாய்க்குலத்துக்கு அர்ப்பணம் செய்கிறேன். இது ஆண்டாண்டு காலம் அவர்களின் அறிவிற்கு விருந்தாகவும் பாதைக்கு விளக்காவும்ம் அமைய எல்லாம் வல்ல இறைவன் அருள் பாலிப்பானாக!” என்று இந்நூலின் ஆசிரியர் பாத்திமா ஷாஜஹான் அவர்கள் தனது முன்னுரையில் கூறியிருக்கிறார்கள்.

Author

Reviews

There are no reviews yet.

Be the first to review “பெண் வலிமார்கள்”

Your email address will not be published. Required fields are marked *