கல்லெறிந்தால் நெல் விளையும் முல்லைப் பெரியாற்றின் கரையில் இருக்கும் சின்னமனூர், கவியருவி அப்துல் காதர் பிறந்த ஊர். தொடக்கப் பள்ளி ஆசிரியர் திரு. கில்லட் ராஜதுரை அவர்களால் கிந்தனன் கதா காலட்சேபத்திற்காக ஏழாம் வயதில் மேடையேறிய இவர் இன்று வரை இறங்க வில்லை.
மதுரை தியாகராசர் கல்லூரியில் விலங்கியலில் இளங்கலைப் பட்டமும் திருக்கி தேசியக் கல்லூரியில் 1970 ல் தமிழில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். மதுரை வஃபு வாரியக் கல்லூரியில் தமிழாசிரியராக ஓராண்டும் அதன்பின் வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியில் 35 ஆண்டுகள் தமிழ்த் துறைப் பேராசிரியராகவும் பணியாற்றி 2006ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.
1971ஆம் ஆண்டு கவியரசு கண்ணதாசன் நடத்தி வந்த “கடிதம்” வார இதழில், அப்துல் காதர் எழுதிய “நரைகள்” என்ற கவிதை வெளியானது. இந்தக் கவிதையைப் பாராட்டும் விதமாக, அன்று வாணியம்பாடி இசுலாமியா கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக இருந்த கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுக்கு கண்ணதாசன் ஒரு கடிதம் எழுதுகிறார். அதில் “இந்தப் பிஞ்சுப்பிறை நிலவை வானமாய் நீங்கள் ஏற்றுக் கொண்டால் அது பௌர்ணமியாகப் பரியமிக்கும். நான் முன் மொழிகிறேன்”. என்று அப்துல் காதரைப் பற்றி கண்ணதாசன் எழுதியதைத் தொடர்ந்து அப்துல் காதரை அங்கு ஆசிரியப் பணியில் அப்துல் ரகுமான் அமர்த்திக் கொண்டார்.
இவர் தமிழக அரசின் “பாரதிதாசன் விருது”, உலகத் தமிழ்க் கவிஞர் மன்றத்தின் “கவிமாமணி” விருது, “கவிக்கோ விருது” முதலிய பல விருதுகளைப் பெற்றவர். “மின்னல் திரிகள்” உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கவிதை மற்றும் உரைநடை நூல்களை எழுதியவர். 2000 முதல் 2016 வரை “ராஜ் தொலைக்காட்சி”யில் இவர் நடத்திய “அகட விகடம்” நிகழ்ச்சி அமோக வரவேற்பைப் பெற்றது.
Reviews
There are no reviews yet.