நயாகரா நீர்வீழ்ச்சியை
சொகுசுப் படகிலேறி
மிக அருகில் சென்று
கண்கள் விரிய விரிய
காதலோடு பார்த்ததுண்டா
இதுதாண்டா தண்ணீர்
என்பது போல்
அது
ஆக்ரோஷமாக வீழ்வதை
அனுபவித்ததுண்டா
அது
எத்தனைச்
சுகானுபவம் தெரியுமா
நயாகரா
கோபமாய்க் கொட்டுகிறதா
காதலாய்க் கொட்டுகிறதா
என்று
முடியாத பட்டிமன்றம்
ஒன்று
நடத்திக் கொண்டே இருக்கலாம்
பேரருவியை
நோக்கிய பயணமாக
தற்காலிக மழையாடை அணிந்து
விசைப்படகின்
தாழ்வாரங்களில் நின்று
பயணப்படும்போது
மனதில் இருப்பது
போகலாம் போகலாம்
நயாகராவைத் தொட
சீக்கிரம் போகலாம்
என்ற தவிப்புதான்
விசைப்படகு
நதியை எதிர்த்து நீந்திக் கொண்டு
நயாகராவின்
…ஹோ… என்ற
ராட்சசப் பொழிவை நோக்கி
முன்னேற முன்னேற
சாரல்
சாரல்
சாரல்
பல திசைகளிலிருந்தும்
உற்சாகச் சாரலின்
உத்வேகக் கொண்டாட்டம்
இன்னும் இன்னும்
முன்னேற ஆவல்
குளிர்
பயம்
பதட்டம்
எல்லாம் தொற்றிக்கொண்டு
அருகிருக்கும் நண்பரை
இறுகக் கட்டிக் கொள்ளத்
தூண்டும்
முகமெலாம்
அதீத பூரிப்பு
உதடுகளில்
அப்பட்டமாய் நடனமாடும்
குளிரின் தடதடப்பு
வாவ்
பயணப்பட்ட அனைவரிடமிருந்தும்
ஒரே குரலில் மீண்டும் மீண்டும்
வாவ்….வாவ்….
முப்புறமும் சூழ்ந்து
கொட்டோ கொட்டென்று
கொட்ட
நடுவில்
நயாகராவின்
கோபாவேசத்தை எதிர்த்துக் கொண்டு
அதன் சாரல் காதலை
முகங்களில் ஏந்திக்கொண்டு
வெகு அருகில் விசைப்படகில்
திகிலோடு நிற்பது
விவரிக்க முடியாத ஆனந்தப் பெருக்கு
அவ்வளவுதானா?
கொட்டும் நயாகராவுக்கு
இன்னும் இன்னும்
அருகில் செல்ல வேண்டுமே
அதன் முகத்தை
கிட்டத்தில் பார்த்தாயிற்று
அதன் முதுகையும் பார்க்க வேண்டுமே
எப்படி?
அதற்கும் வைத்திருக்கிறார்கள்
ஒரு வழி
கனடாவில் வசிக்கும் கவிஞர் புகாரி எழுதிய “நயாகரா சொல்லும் சாரல் வாழ்த்து” எனும் கவிதை நூலில் ‘நயாகரா சொல்லும் சாரல் வாழ்த்து’ எனும் தலைப்பில் எழுதிய கவிதை.
இதுபோன்ற ஏராளமான கவிதைகளைத் தொகுத்து நயாகரா சொல்லும் சாரல் வாழ்த்து என்ற தலைப்பில் ஒரு கவிதை நூலைத் தந்திருக்கிறார் கவிஞர் புகாரி.
Reviews
There are no reviews yet.