“தமிழில் தனிப்பெருஞ்செல்வமாய், உலகம் உயர்வடைய, அமைதி காண, சமுதாயத்தின் அங்கமான தனிமனித ஒழுக்கம் உயர்வடைய வேண்டும் என்ற உன்னத லட்சியத்துடன் எழுதப் பெற்ற உலகத் தரமிக்க ஒரு பெரு நூல் திருக்குறள்.
திருக்குறள் மனித வாழ்க்கைத் தத்துவத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது. மனித குணங்களை எடுத்தியம்புகிறது. எதை ஏற்க வேண்டும். எதைத் தவிர்க்க வேண்டும் என விளக்கம் தருகிறது.
திருக்குறளில் மாயா விநோதங்கள் ஏதுமில்லை. வானம் ஏறி வைகுண்டம் செல்வதற்கோ, மணலைக் கயிறாகத் திரிப்பதற்கோ, வானத்தை வில்லாக வளைப்பதற்கோ வழி சொல்லப்படவில்லை. திருக்குறளில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் அனைத்தும் இயல்பானவை. எளிதாகக் கடைப்பிடிக்கும் தன்மை உடையவை. நடைமுறைச் சாத்தியம் மிக்கவை. செயல் வடிவம் கொண்டவை.
திருக்குறள் கருத்துக்கள் ஏட்டுச்சுரைக்காய் அல்ல. அது ஒரு கூட்டுப் பொரியல். முழுமையாக ஏற்று, உண்டு, பயன் பெறக் கூடியது. இந்நூல் மேடையிலே ஏறி மேற்கோள் காட்டிப் பேசுவதற்கான நூல் அல்ல. அது வாழ்வில் மேற்கொண்டு வாழ்வதற்கான நூல் ஆகும்.
நம் நாட்டுப் பிள்ளைகளின் உள்ளங்கள் பண்பட்டாலன்றி நமது சமுதாயம் மறுமலர்ச்சி காண இயலாது. “ நாளைய சமுதாயம் பிள்ளைகள் கையில்” என்பதால் அவர்களை நெறிப்படுத்தி விட்டால் திருவள்ளுவர் விரும்பிய உலகம் உருவாகி விடும். திருக்குறள் உணர்ந்து கற்றோர் ஆற்ற வேண்டிய கடமையும் அதுவே.
அந்நிலையில் பாமரர்களும் புரியும் வண்ணம், மாணவர்களும் எளிதில் அறியும் வண்ணம், சான்றோர்களும் வாழ்த்தும் வண்ணம் திருக்குறளுக்கு ஓர் எளிய, நுண்ணிய நேரடியான கருத்துரையை, புதிய சிந்தனைகளுடன் எழுத வேண்டும் என என் உள்ளுணர்வு தூண்டியதன் விளைவு, பல ஆண்டுகளுக்கு முன் கருக்கொண்ட எனது எண்ணம் உருவாகித் திருவாகி இன்று உங்கள் கைகளில் நூலாகத் தவழ்கிறது.
ஆங்கில மெட்ரிக் பள்ளிகள் பெருகிவிட்ட இக்கால கட்டத்தில் தமிழோடு கைகுலுக்கும் ஆங்கிலத்திலும் உரை தொகுத்து இணைத்துள்ளேன்” என்று இந்நூலின் ஆசிரியர் அவர்கள் தனது முன்னுரையில் கூறுகிறார்கள்.
Reviews
There are no reviews yet.