இஸ்லாமிய அடிப்படையில் தோன்றி தமிழ் இலக்கியப் பரப்பில் பெருவழக்கைப் பெற்று அதன் கொடுமுடியாகத் திகழ்ந்து கொண்டிருப்பது சீறாப்புராணம்.
நபிகள் நாயகம் முகம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கையைக் கருப்பொருளாகக் கொண்டு, காப்பிய இலக்கணங்கள் அனைத்தும் ஒருங்கே அமையப் பெற்று, சிறந்து விளங்குகிறது சீறாப்புராணம். இது ஒரு பெருங்காப்பியம்.
‘நபியின் வாழ்க்கை’ என்பதே அறபு மொழியில் ‘சீறத்துன்னபி’ என வழங்கப்படுகிறது. இச் சொற்றொடரை ‘சீறத்து அல் நபி’ எனப் பிரிக்கலாம். சீறத் என்றால் வாழ்க்கை, நபி என்றால் தீர்க்க தரிசி; அல் என்பது இங்கு இன் என்னும் இடைநிலையாக உள்ளது. ஐந்தாம் வேற்றுமைப் பொருளைக் குறித்து நிற்கின்றது. அறபு எழுத்து வடிவில் ‘சீறத்’ என எழுதப்படினும் அது உச்சரிக்கப்படும் பொழுது ‘சீறா’ என்றே சொல்லப்படுகிறது. இங்கே சீறத் அல்லது சீறா என்பது வாழ்க்கை எனப் பொருள்படினும் பொதுவாக அறபு அறிஞரும் சிறப்பாக முஸ்லிம் அறிஞரும் சீறத் அல்லது சீறா என்னும் அறபுச் சொல்லைப் பெருமானார் முகம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கையையே சிறப்பாகச் சுட்டும் ஒரு சொல்லாகக் கொள்வர். எனவேதான் சிறத் என எழுதப்பட்டு சீறா என்றே சொற்றொடரான முதற் சொல்லாய் விளங்குகிறது. இச்சொற்றொடரின் மற்றச் சொல்லான ‘புராணம்’ என்பது வடமொழிச் சொல்லாகும்.
‘புனிதமான வரலாறு’ என்பதனையே இங்கே புராணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது எனலாம். ஆக, சீறா என்னும் அறபுச் சொல்லும் சமஸ்கிருத மொழியில் இருந்து வந்த, புராணம் எனத் தமிழ் படுத்தப்பட்டுள்ள புராண என்ற சொல்லும் சேர்ந்தே ‘சீறாப்புராணம்” என அமைந்துள்ளது என்பதைக் காண்கின்றோம். பெருமானார் முகம்மது நபி(ஸல்) அவர்களின் புனிதமான வாழ்க்கை வரலாற்றினைப் புகழ்ந்து பாடப்படும் காப்பியங்களுள் தலைசிறந்த ஒன்றாகச் சீறாப்புராணம் திகழ்வதைப் பார்க்கிறோம்.
சீறாப்புராணத்தை இயற்றியவர் உமறுபுலவர். இவர் பற்றிய திட்டவட்டமான குறிப்புகளைச் சீறாப்புராணத்திலிருந்து பெற்றுக் கொள்ள இயலவில்லை. உமறுப் புலவரின் தந்தை பெயர் மாப்பிள்ளை முகம்மது நயினார் என்றும் உமறுப் புலவர் ஹிஜ்ரி 1052ஆம் ஆண்டு ஷ’பான் மாதம் பிறை 9-ல் பிறந்தார், ஹிஜ்ரி 1115-ஆம் ஆண்டு றபீஉல் அவ்வல் மாதம் பிறை 14-ல் காலமானார் என்றும் கூறுகிறது. இச்செய்திகள் ஒரு செய்யுளில் இடம் பெற்றுள்ளன. ஹிஜ்ரி 1052-ஆம் ஆண்டு ஷ’பான் தலைப் பிறை 1642-ஆம் ஆங்கில ஆண்டு அக்டோபர் மாதம் 25-ஆந் தேதி சனிக்கிழமை ஆகும். எனவே ஷ’பான் மாதம் 9-ம் பிறை 1642ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகும். அதே போன்று உமறுப்புலவர் உயிர் நீத்த நாள் ஹிஜ்ரி 1115-ஆம் ஆண்டு றபீஉல் அவ்வல் மாதம் பிறை 14-இல் என்றும் கூறப்பட்டுள்ளது. ஹிஜ்ரி 1116-ஆம் ஆண்டு றபீஉல் அவ்வல் மாதம் 15-ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகும். இதற்கிணங்க ஹிஜ்ரி 1115-ஆம் ஆண்டு றபீஉல் அவ்வல் மாதம் 14-ஆம் பிறை கி.பி.1703-ஆம் ஜூலை மாதம் 28-ஆந் தேதி சனிக்கிழமை ஆகும். இதன்படி பார்க்கும்பொழுது உமறுப் புலவர் அவர்கள் 63 ஹிஜ்ரி ஆண்டுகள் (அதாவது 61 ஆங்கில ஆண்டுகள்) இவ்வுலகில் வாழ்ந்தார்கள் என்று கொள்ளவேண்டும்.
சீறாப்புராணத்திற்கு உரை எழுதியவர் சதாவதாணி செய்குத் தம்பி பாவலர் அவர்கள். சீறாப்புராணத்தின் மூலமும் அதன் உரையும் சேர்த்து இரண்டு பகுதிகளாக கொடுத்துள்ளோம்.
Reviews
There are no reviews yet.