குழந்தைகளால் நேசிக்கப்பட்ட¸ குழந்தைகளைப் பெரிதும் நேசித்த மாமனிதர்!
மாணவர்களுக்கு வழிகாட்டிய சிறந்த ஆசான் (ஒரு லட்சம் மாணவர்களைச் சந்தித்தவர்)¸
தமது நாட்டு மக்களுக்காகக் கனவு கண்ட தொலை நோக்காளர்.
அறிவியல் உலகம் பெரிதும் வியக்கும் அற்புத விஞ்ஞானி¸
குடியரசுத் தலைவர்களிலேயே எளிமையிலும் எளிமையானவர்¸
முன்னேற்றச் சிந்தனைகள் புதுமைப் புரட்சியாளர்¸
பிரபஞ்சக் கவிஞர் (எழுத்தாளரும்¸ பேச்சாளரும்)¸
உழைப்பின் மூலம் உயர முடியும் என்கிற உண்மையை உறுதி செய்த பேருழைப்பாளி¸
மனித நேயத்திலும்¸ ஆன்மீகத்திலும் சிறந்த பண்பாளர்¸
இப்படி கலாமின் பரிமாணங்கள் அநேகம்.
கலாம் அத்தனை தலைமுறைகளாலும் ஆராதிக்கப்படவிருக்கும் யுகாந்திர புருஷர்!
இயற்கையின் மாறாத விதியை மீறாதவராய் தம் தூல சாரீரத்தை அவர் உதறி விட்டார்¸ காலத்திற்கொப்பான தொடர் இயக்கத்தைக் கொண்டு விட்டார்.
இனி-உதிக்கின்ற சூரியனில்¸ பூக்கின்ற மலர்களில் கலாமின் திருமுகத்தை நாம் பார்க்கலாம்.
அவருடைய குரலை கடலின் அலையோசையில் கேட்கலாம்.
அசைந்து செல்லும் காற்றில் அவரும் இசைந்து செல்வதை நாம் உணரலாம். மரங்கள் தலையசைத்து ஆமோதிக்கின்றன கலாமின் இருப்பை (ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட்டு பசுமைச் சூழல் படைத்தவர் ஆயிற்றே).
பாரதத்தைப் புண்ணிய பூமி என்பார்கள். நம்மிடையே கலாம் இருப்பது நாம் செய்த புண்ணியம்.
ஓடுகின்ற ஆற்றில் அள்ளிய ஒரு கைநீர் போல் கலாமைப் பற்றிய ஒரு சிறிய நூல் இது! எனினும்¸ ஆற்றுநீரின் அதே தன்மை அள்ளிய கைநீருக்கும் உண்டுதானே!
இந்நூலை மரியாதைமிக்க நண்பர்¸ நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய திரு. சி. எஸ். தேவநாதன் எழுதியிருக்கின்றார். பல நூல்களின் சாற்றைப் பிழிந்து அதன் ரசத்தைத் தந்திருக்கின்றார். அவருக்கு எமது நன்றிகள். அப்துல் கலாம் பற்றிய அரிய தகவல்கள் பலவற்றையும்¸ அவர் மாணவர்களுக்கு ஆற்றிய உரைகள்¸ அவரது இளமைப் பருவம்¸ கல்லூரிப் பருவம்¸ விஞ்ஞானியாக¸ ஜனாதிபதியாக இந்திய மக்களுக்குச் செய்த சேவைகள்¸ உலகளவில் இந்தியாவை ஒரு வல்லரசாக நிமிர வைத்த விதம் ஆகியவற்றை சுருக்கமாகத் தந்திருக்கிறார்.
இந்நூல் தமிழ் கூறும் நல்லுலகிற்கு குறிப்பாக பள்ளி¸ கல்லூரி மாணவர்களுக்குப் பெரிதும் பயன்படும் என்று நம்புகிறோம். இந்நூலைப் படிக்கும் நீங்கள் எந்தத் துறையைச் சேர்ந்தவராயினும் உங்களை மேலும் பல உயரங்களுக்குக் கொண்டு செல்லும் உந்து சக்தி இந்நூலில் உள்ளதென்று நிச்சயம் நம்பலாம்.
-எஸ்.எஸ். ஷாஜஹான்
பதிப்பாளர்.
Reviews
There are no reviews yet.