“இளைஞர்கள் என்று பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட, நாற்பது வயதிற்கு உட்பட்டவர்களைக் குறிப்பிடலாம். இந்த இளமைப் பருவம் ஒருவரின் வாழ்வில் இணையில்லா பருவம் என்றால் அது மிகையாகாது. ஏனெனில் இந்த வயதில்தான் உடல் வலிமை துளும்பத் தொடங்கும். அறிவுவலிமை அதிகரிக்க ஆரம்பிக்கும். இவ்விரு வலிமைகளைக் கொண்டு ஒருவரால் அற்புதங்களை ஆற்ற முடியும்.
இளைஞர்கள் ஒரு மகன் என்ற முறையில், ஒரு மாணவர் என்ற முறையில், ஒரு கணவர் என்ற முறையில், ஒரு வணிகர் என்ற முறையில், ஒரு இளைஞர் என்ற முறையில் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகள் ஏராளமானவையாகும். அவை எவை என்பது பற்றியும், அவற்றை வெல்ல அவர்கள் புரிய வேண்டியவை எவை என்பது பற்றியும் அவர்கள் அறிந்திருத்தல் அவசியமாகும். இந்நூலில் நான் அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகள் எவை என்பதைக் கூறியிருக்கிறேன். அவற்றை வெல்ல வழி என்பதைக் குறிப்பிட்டிருக்கிறேன்.
இளைஞர்களாய் இருப்பதால் அவர்கள் மனதில் பல கேள்விகள் எழலாம். அவர்கள் இதயத்தில் பல ஐயங்கள் ஏற்படலாம். இந்நூலில் அவர்களுக்கு ஏற்படும் கேள்விகளுக்கு விடை அளித்திருக்கிறேன். அவர்களுக்கு ஏற்படும் ஐயங்களுக்கு விளக்கம் வழங்கியிருக்கிறேன் அந்த விடைகளும், விளக்கங்களும் பெரும்பாலும் அல்லாஹ் அளித்த விடைகளும், விளக்கங்களும் ஆகும். அவன் தூதர் வழங்கிய விடைகளும், விளக்கங்களும் ஆகும். அவற்றை இளைஞர்கள் முற்றிலும் நம்பவேண்டும், முற்றிலும் பின்பற்ற வேண்டும். அப்படிப் பின்பற்றினால் வெற்றி உறுதி என்பது பற்றி எவ்வித ஐயமும் அநாவசியமாகும்.
மறுமையில் ஒருவரிடம் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று, “உன் இளமையை எப்படிக் கழித்தாய்?” என்பதாக இருக்கும். அதற்குக் காரணம் இளமைப் பருவம் தவறுகள் செய்யப்படுவதற்குத் தகுந்த பருவமாக இருப்பதுதான். எனவே நான் இந்நூலில் இளைஞர்கள் செய்யச் சாத்தியமான தவறுகளைச் சுட்டிக் காட்டியிருக்கின்றேன். இளைஞர்கள் புரிய வேண்டிய நன்மைகளைக் குறிப்பிட்டுக் கூறியிருக்கிறேன். இளைஞர்கள் தாங்கள் தள்ள வேண்டிய பழக்கங்கள் பற்றிக் கூறியிருக்கிறேன். இளைஞர்கள் கொள்ள வேண்டிய பழக்கங்கள் பற்றிச் சொல்லியிருக்கிறேன்.
இளைஞர்கள் நாடு, வீடு இரண்டிற்கும் அவசியமானவர்கள் ஆவர். நாடு தழைக்கவும், வீடு தழைக்கவும் அவர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் அநேகம் ஆகும். அப்பணிகளில் முதலாவது, முக்கியமானது அவர்களே ஓர் உத்தமமான இளைஞராக உருவாவதுதான். அப்படி உருவானால் அவர்கள் வீட்டிற்கு ஒரு நல்ல பிள்ளையைக் கொடுக்க முடியும், நாட்டிற்கு ஒரு நல்ல குடிமகனை வழங்க இயலும். இந்த வகையில் இந்நூல் சிறிதளவாவது உதவுமானால் நான் பெருமளவு மகிழ்கிறேன்” என்று இந்நூலின் ஆசிரியர் எம்.ஆர்.எம்.முஹம்மது முஸ்தபா அவர்கள் இந்நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.
Reviews
There are no reviews yet.