சென்னை ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத்தில் மணிமேகலை¸ பெருங்கதைக் காப்பியங்களையும்¸ பெரியார் திடலில் இராவண காவியத்தையும் நான் தொடர் சொற்பொழிவாற்றிய போது¸ அவ்வுரைகளை கேட்க திரு. மணவை முஸ்தபா வருவது வழக்கம். இந்த இலக்கியங்களைப் போன்றே ஏதேனுமோர் இசுலாமிய இலக்கியத்தை நான் தொடர் சொற்பொழிவாற்ற வேண்டுமெனக் கேட்டார். இசுலாமிய இலக்கியங்களில் பயின்று வரும் அரபு¸ பார்சிச் சொற்கள்¸ மார்க்க நெறிமுறைகள் ஆகியவற்றில் சிறிதும் பயிற்சியில்லாத நான் இப்பணியைச் செய்ய முடியுமா என ஐயுற்றேன். நண்பர் அவர்கள் வலியுறுத்தவே¸ நபிகள் நாயகத்தின் வரலாறு கூறுவதும்¸ இசுலாமியத் தமிழ்க் காப்பியங்களில் சிறப்பிடம் பெற்றிருப்பதுமான ‘சீறாப்புராண’த்தைத் தொடர் சொற்பொழிவாகச் செய்யலாம் என எண்ணினேன். முன்னரே சீறாப்புராணக் கருத்தரங்கு ஒன்றில் ‘சீறாவில் தமிழ்ப் பண்பாடு’ எனும் தலைப்பில் என்னை ஒரு கட்டுரை படித்திருந்தேன். அதற்கெனச் ‘சீறா’ முழுமையும் ஓரளவு ஊன்றிப் படித்திருந்தேன். ஆதலின் ‘சீறா’வைப் பத்துப் பொழிவுகளில் கூறுவதாக இசைந்தேன். ஆயின் அஃது இருபத்தைந்து கூட்டங்களாக நீண்டது. இந்த இருபத்தைந்து கூட்டங்களிலுமாக நான் சீறாவை முழுமையாகச் சொல்லியுள்ளேன் எனக் கூறுதற்கில்லை. ஆங்காங்கே என் அறிவுக்கு எட்டியவரை சுட்டிக் காட்டியுள்ளேன். அவ்வளவே! பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையாகக் கூட்டங்கள் தொடர்ந்து ஓராண்டு நடந்தன.
இச் சீறாச் சொற்பொழிவுகளை “நெஞ்சையள்ளும் சீறா” என்ற நூல் வடிவில் நான்கு பகுதிகளாக மிகவும் சிறப்பாக “யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்”-ன் சார்பு நிறுவனமான “நேஷனல் பப்ளிஷர்ஸ்” மூலம் வெளியிட்டுள்ளார்கள். இந்நூலின் முதல் பகுதியே “நெஞ்சையள்ளும் சீறா – இரண்டாம் பாகம்” என்னும் நூல்.
-திரு. சிலம்பொலி செல்லப்பனார்.
Reviews
There are no reviews yet.