இஸ்லாம் ஈன்றெடுத்த மாபெரும் சிந்தனையாளர்களில் ஒருவராக, நாற்பெரும் இமாம்களுக்கு நிகரான மிகப்பெரும் அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படும் இமாம் கஸ்ஸாலி(ரஹ்) அவர்கள் உண்மையில் ஒரு மத்ஹபையே தோற்றுவிக்க எண்ணியவர்களாவர். ஒரு கட்டடத்திற்கு நான்கு மூலைகளில் நான்கு தூண்களும் நடுவே ஒரு தூணும் இருப்பது போன்று கனவு கண்டு, நடுவே உள்ள தூண் வீண்தானே என்று கனவிலே நினைத்து, விழித்தெழுந்ததும் நாம் ஐந்தாவது மத்ஹபை ஏற்படுத்த எண்ணியதும் வீண் என்பதை இறைவன் அக்கனவின் மூலம் தமக்கு உணர்த்தி இருப்பதாக உணர்ந்து அம்முயற்சியை அவர்கள் கைவிட்டனர். அவர்கள் குர்ஆன், ஹதீஸ் ஆகியவற்றையெல்லாம் ஒன்று சேர்த்து தித்திக்கும் தேன் பாகாக நமக்கு ஆக்கித் தந்திருக்கும் “இஹ்யாவு உலூமித்தீன்” என்ற அவர்களின் இணையில் பெருநூல் அவர்களை இறவா வரம் பெற்ற புகழுருவினராக ஆக்கியுள்ளது. “உலகிலுள்ள எல்லா அறிவியல் நூல்களும் அழிந்து போய் விடினும் அவற்றை இஹ்யாவிலிருந்து உண்டு பண்ணிவிடலாம்“ என்று ஒரு பழமொழியே ஏற்படும் வண்ணம் சிறப்புற்று விளங்கும் அச்சீறிய நூலின் சாற்றைப் பிழிந்தெடுத்து, அதிலே வகைவகையான இன்னும் பல ருசிகளையும் சேர்த்துத் தந்தாற் போன்று இஹ்யாவு உலூமித்தீனின் ஒரு அத்தியாயமான “கிதாபுந் நிய்யா” -ஐ ”நல்லெண்ணம்” என்ற தலைப்பில் மௌலவி எஸ்.எஸ். அப்துல் வஹ்ஹாப்(பாகவி) அவர்கள் தமிழாக்கம் செய்துள்ளார்கள்.
Reviews
There are no reviews yet.