ஞானம் என்பது கணப்பொழுதில் ஒளிப்பொறியாய் தோன்றி விடுவதுதான். ஆனால், அந்தக் கணத்துக்காக ஒருவர் ஆண்டுக்கணக்கிலும் காத்திருக்கும்படியாகும். ஆம், அதற்குத் தேவையான தகுதியை அவர் வளர்த்துக் கொள்ள வேண்டும் அல்லவா.
இறையுணர்வு,
இறைக் காதல்,
இறையானுபவம்,
இறை ஞானம் – என்ற அநேக படிநிலைகள் உள்ளனவே.
ஞானி தன் செயலின் விளைவுகளை இறைவனின் கையில் ஒப்படைத்துவிடுகிறான். அதனால் அவற்றுக்குப் பொறுப்பேற்கும் நிலை இறைவனுக்கு. இந்த இணைப்பை ஏற்படுத்துவது அவர்களுக்கிடையேயான நேசம்.
அடியான் இறைவனைத் தியானித்திருக்கிறான். இறைவன் அடியானைத் தன் பாதுகாப்பில் வைக்கிறான்.
ஏமாற்றமும், விரக்தியும் இறைநம்பிக்கை இல்லாதவருக்குத் தான்(அரைகுறை நம்பிக்கை கொண்டவர்க்கும் அதே கதிதான்). நம்பிக்கை என்பது எவ்வித சந்தேகத்துக்கும் இடமளிக்காத, முழுமையான நம்பிக்கையாய் இருக்கவேண்டும்.
நீங்கள் மிக உயர்ந்த நிலையிலும் தன்னடக்கத்துடன் நடந்துகொண்டால், இறைவன் உங்களை மேலும் உயர்த்துகிறான். உங்கள் உயர்வு குறித்து கர்வம் கொள்வீராயின் இறைவன் உங்களை முன்னிலும் தாழ்ந்த இடத்துக்குத் தள்ளி விடுகிறான்.
ஞானிகள் எக்காலத்தும், எது பற்றியும் கர்வம் கொள்வதில்லை.
இறைநேசர்கள் கண்டதையெல்லாம் கொண்டு தங்கள் இதயத்தை நிரப்புவதில்லை. இறைவனின் வருகைக்காகத் தங்கள் இதயத்தை அவர்கள் தூய்மைப்படுத்தி வைக்கிறார்கள். அவன் உவக்கும்படியாய் அவனை வரவேற்றுக் கொள்கிறார்கள்.
பள்ளத்தை நோக்கியே வெள்ளம் பாய்கிறது, பணிவிருக்கும் உள்ளத்தை நோக்கியே இறைவன் வருகிறான்.
பாவானைகளை வெறுப்பதும், நேர்மையை நேசிப்பதும் இறைவனின் இயல்பு. தன் பணியாளனின் விசுவாசத்தைத்தானே எசமான் எதிர்பார்ப்பது,
ஞானி இறைவனால் படைக்கப்பட்டவைகளை வியப்பதன் மூலம் இறைவனை வியக்கிறான். அவனுக்குப் பிரபஞ்சம் சலிப்பதேயில்லை. ஞானம் அவனை ஆர்வப்படுத்துகிறது. ஞானிக்குக் கடலைப்போலவே ஒற்றைப் பனித்துளியும், வானத்தைப்போலவே செடியில் பூத்த ஒத்தைப்பூவும் பிரமிப்பூட்டுகிறவைதாம். தன்னைப் படைத்த இறைவனின் ஆற்றலை உணரும்போது அவனுடைய பிரமிப்புக்கு அளவேது? அதுவரை அவனைப் பிரமிக்க வைத்து மற்றவை எல்லாம் அவனது கண்ணையும், கருத்தையும் விட்டு மறைந்து விடுகின்றன.
ஞானி வார்த்தைகளைத் தேடுவது பிறருக்காக, அவன் மவுனத்தை நாடுவது தனக்காக. அவன் நாளடைவில் சொற்களைக் குறைத்துக் கொண்டு, மவுனத்தை அதிகரித்துக் கொள்கிறான்.
“இசை புல்லாங்குழலில் இல்லை, அதை வாசிப்பவனிடம் இருக்கிறது“. இது நமக்குத் தெரியும்.
நாம் கண்டடையும் தீர்மானத்துடன்தான் புறப்படுகிறோம்.
ஆனால், “இதோ உன்பாதை“ என்று நமக்குக் காட்டித் தர ஒருவர் வேண்டும் அல்லவா. அந்த நெறியாளர்தான் ஞானி.
பூமி எதையும் பிரதியாய் எதிர்பார்த்துக் கொடுப்பதில்லை. வானம் எதையும் எதிர்பார்த்து மழை பொழியவில்லை. ஞானிகளும் அப்படித்தான், “யாம் பெற்ற பேறு பெறுக இவ்வையம்” என்கிற உயர்நோக்குடன் ஞான விதைகளை இங்கே அவர்கள் விதைத்துச் செல்கிறார்கள். ஞானவேட்கையும், முயற்சியும் உடைய எல்லோருமே விளைச்சலின் பயனை அறுவடை செய்ய முடியும்.
“ஞானியர் காட்டும் பாதை” என்கிற இந்நூல் ஓடுகிற நதியில் அள்ளிய ஒரு கை நீரேயாகும். ஆனால், நதிநீரின் தன்மையும், நன்மையும் குன்றாத அளவில் இது உங்கள் கையில் சேர்க்கப்பட்டிருக்கிறது என்று நீங்கள் நம்பலாம். இந்த நூல் முயற்சியில் என்னை ஈடுபடுத்திய பண்பாளரும், பதிப்பாளருமான ஜனாப் ஷாஜஹான் அவர்களுக்கு உளங்கனிந்த நன்றிகள். நூற்பணியில் தங்கள் பங்களிப்பை வழங்கிய அன்பர்களுக்கு எனது வாழ்த்துக்கள், என்று இந்நூலின் ஆசிரியர் தனது முன்னுரையில் இந்நூலைப் பற்றி குறிப்பிடுகிறார்.
Reviews
There are no reviews yet.