“போவோம் குணங்குடிக்கு எல்லோரும்
புறப்படுங்கள்
போவோம் குணங்குடிக்கு எல்லோரும்”
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் ஒரு குரல் உரக்க ஒலித்தது; அழைத்தது. வேண்டியவருக்கு மட்டும் விடுத்த அழைப்பல்ல அது. அந்த அழைப்பு சாதிமத பேதமற்ற சமரச அழைப்பு; சகல மனிதர்களுக்கும் விடுத்த சகோதர அழைப்பு. ஏனென்றால் அந்தக் குரல் அழைத்த இடம், எல்லோர்க்கும் சொந்த இடம்; எல்லோரும் விட்டு வந்த இடம். அது மனிதனை மனிதன் சுரண்டிப் பிழைக்கும் பொருளாதார பூமியல்ல; சாதி சமயப் பகையால் சண்டையிட்டு மடியும் இருளாதார பூமியல்ல; அருளாதார பூமி. எல்லோரையும் ஆன்ம நேயத்தால் இணைக்கின்ற இலட்சியபுரி. குலம் பார்த்தல்ல, குணம் பார்த்துக் குடியுரிமை தரும் குணங்குடி.
யார் அப்படி அழைத்தது? அவர்தாம் ஞானவள்ளல் குணங்குடி மஸ்தான் சாஹிப். இராமநாதபுரம் தொண்டிக்கு வடமேற்கிவல் பத்துக்கல் தொலைவிலுள்ள குணங்குடி என்னும் சிற்றூரில் கி.பி.1792 (ஹிஜ்ரி 1207) ஆம் ஆண்டு பிறந்தவர் மஸ்தான் சாஹிப்.
இதுவரை வெளிவந்த குணங்குடியார் பாடல் தொகுப்பு நூல்களில் அச்சுப் பிழைகள் மலிந்திருக்கின்றன. பல பிரதிகளை ஒப்பு நோக்கி இப்பதிப்பில் அப்பிழைகள் நீக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் கருத்து மயக்கமும். கருத்து முரணும் உள்ள வரிகள் எல்லாப் பிரதிகளிலும் அப்படியே இருநத்தால் அவற்றின் உண்மை வடிவம் ஊகிக்கப்பட்டுக் குறிப்புரையில் தரப்பட்டுள்ளது.
குறிப்புரை என்று பெயர் பெற்றிருப்பினும் இவ்வுரை விளக்க வேண்டியதை எல்லாம் விளக்கியிருக்கிறது. இதுவரை விளக்கப்படாத சூஃபி தத்துவச் சொற்கள், யோக பரிபாஷை ஆகியவற்றை இவ்வுரை சுருக்கமாக விளக்குகிறது. இத்தகைய சொற்கள் முதல் முதல் வருகிறபோது மட்டுமே உரை தரப்பட்டுள்ளது. மீண்டும் வரும் இடங்களில் சுருக்கம் கருதி உரை தவிர்க்கப்பட்டுள்ளது. அடைப்புக் குறிக்குள் உள்ள (அ) அரபுச் சொற்களையும் (பா) பாரசீகத்தையும் (உ) உருதுவையும் குறிக்கின்றன என்று கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் தனது முன்னரையில் இந்நூலைப் பற்றி கூறியிருக்கிறார்கள்.
Reviews
There are no reviews yet.